Monday 18 March 2019

அன்னா கரீனினா-மீறலின் ஊசலாட்டம்-2

மீறலின் ஊசலாட்டம்-2
ஆப்ளான்ஸ்கி அவன் பொருட்டு லெவினை கிட்டி ஏற்க மறுத்தாள் என்று கூறும்போது லெவினை வென்று விட்டோம் என்று கருதி கிட்டியிடம் காதலை சொல்லலாம்  என்று வரும்போது அன்னாவின் சீண்டலில் அவளை வெல்ல சென்று கிட்டியை கைவிடுகிறான்.அன்னாவுடனான உறவின் முற்பகுதியில் அந்த உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் அப்படியே காலம் நடத்தவே முயற்சிக்கிறான்.அன்னாவின் கணவன் கரீனுக்கு விரான்ஸ்கி அன்னா உறவால் ஏற்படும் மனச்சங்கடங்களை கருத்தில் கொள்ளாமல் தங்கள் உறவை தொடர்கிறார்கள்.குழந்தை அன்னா பிறந்த போது  ஏற்படும் அன்னாவின் மாற்றத்தால் அன்னா வை இழந்து விட்டேன் என எண்ணி தற்கொலைக்கு முயற்சி செய்கிறான். பின்னர் அன்னாவுடன் உறவை தொடர்ந்து இருவரும் வெளியூரில் வாழ்வை தொடரும் போதும் எவ்வித தத்தளிப்பும் அற்றவனாகவே இருக்கிறான்.அன்னா அவனை முழுவதுமாக தன் பிடிக்குள் கொண்டு வர முயலும் போதே தன் சுதந்திரத்தை எண்ணி பணியமறுப்பதும்   அதை அன்னா தவறாக புரிந்து தற்கொலை செய்ய குற்ற  உணர்வு கொண்டவனாகிறான். சூழலுக்கு எதிர்வினை ஆற்றுபவனாக அன்றி எவ்விதமான  ஆன்ம தத்தளிப்பும் அற்ற பெரும்பாலானவர்களை போலவே விரான்ஸ்கி அமைகிறான்.அவ்வாறே மற்றவர்களும்.விதி விலக்கு மூவர் மட்டுமே லெவின் ,கரீன் மற்றும் அன்னா.கரீனுடையது ஒரு மத நம்பிக்கையாளனின் மத நம்பிக்கைக்கும் தனிமனித மனத்திற்கும் இடையே நடக்கும் ஊசலாட்டம்.லெவினுடையது ஆன்மீகவாதியின் ஊசலாட்டம்.அன்னா கொள்வது மீறலில் ஊசலாட்டம்.கரீன் அன்னாவின் காதலின் ஆரம்பத்தில் அன்னாவை கண்டித்தாலும் அன்னாவின் பிரசவத்தின்போது இருவரையும் மன்னிக்கிறான். சமூகத்தில் தன் மதிப்பை காக்க விரும்பும் தனி மனித மனம் சூழல் அதற்கு எதிராக அமையும் போது தன் மதிப்பை இழப்பதா அல்லது தன் மத கோட்பாடுகளை பின்பற்றுவதா எனும் குழப்பத்தில் இருக்கும்போது  இரு பக்கமும் ஆடும் ஆட்டம் கரீனுடையது.அதனால்தான் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரே நிலைத்த தோற்றமற்றவனாக கரீன் அமைகிறான்.லெவினோஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கை அற்றவனாக காணப்பட்டாலும் கிட்டியை மணம் செய்த பின் பல சமயங்களில் முரட்டு நடத்தையைக் காட்டினாலும் பின்னர் உள்ளார்ந்த மன விசாரணை மூலம் தன்னைப்போலவே பிறரையும் அன்பு செலுத்தும் ஆன்மீக நிலையை உணர்கிறான்.அன்னா இளமையின் பொற்கனவை நனவில் அடைய நினைப்பவர் அடையும் நிலையின் உதாரணம்.தன் தவறான நடத்தையை கண்டிக்கும் கணவன் தன்னை விவாகரத்து செய்து விட்டால் தன் வாழ்வை தன் விருப்பப்படி மாற்றிக்கொள்ள முடியும் என்று எண்ணுகிறாள். ஆனால் அதற்கு தடையாக தன் மகனை நிறுத்தும்போது தன் கணவனை வெறுக்கிறாள். முழுவதுமாக மீறிச் செல்லும் ஊசல் பிரசவத்தின் போது ஏற்படும் மரண அனுபவத்தால் கரீனிடம் மன்னிப்பு கேட்பதுடன் விரான்ஸ்கியையும் கேட்க வைக்கிறது.எல்லை தாண்டியதும் திரும்புகிறது.எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்துக்கொண்டு விரான்ஸ்கியுடன் வாழ ஆரம்பித்து அவனை முழுவதும் தன் இளமைக்கால பொற்கனவின் நாயகனாக மாற்ற ஆரம்பிக்கிறாள்.அதற்காக  அழகை மட்டுமல்லாது அறிவையும் பயன்படுத்துகிறாள்.இதை அறியாமல் விரான்ஸ்கி தன் சுதந்திரத்தை காக்க எண்ணி பணியமறுக்கிறான். அப்போது லெவின் தன்னை காண வரும்போது கிட்டியை வெல்ல எண்ணி அவனை கவர் எண்ணுகிறாள்.தன் மீது, தன் சமூகம் கற்பித்த நெறிகளை மீது, தான் கொண்ட வெற்றி பெற்றவர்கள் மட்டும் கொள்ளும் மீறலின் அழகோடும் , நூல்களை படித்த அறிவார்ந்த அழகோடும் இருப்பவளிடம் சலனமடையாமலிருக்க லெவினால் முடிவதில்லை.ஆனால் அதிலிருந்து மீண்டு வர கிட்டியின் அன்பு துணையாகிறது.தன் மீது வெற்றி கொள்பவர்கள் வாழும் வாழ்க்கை ஆன்மீகமான வாழ்க்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் போது விளைவுகள் நிறைவு தருவதாகவும் , நனவுலகை மட்டுமே எண்ணும் பொழுது  நிறைவின்மையை தருவதாகவும்  அமையும்.ஏனெனில்  எதன் பொருட்டு மீறல் மேற்கொள்ளப்பட்டதோ அதனை தவிர மற்றவைகள் அனைத்தும் அந்த  மீறலை காரணமாக  காட்டியே மறுக்கப்படும். அதனால் ஏற்படும் இழப்புகளை ஏற்கும்  மனநிலை நனவுலகில் அமைவதில்லை.மீறலை மேற்கொள்பவர்கள்  தன் நிகழ் வாழ்க்கையை துறந்து செல்வதால் அதுவரை மேற்கொண்ட அனைத்து இலக்குகளையும் இழந்து விட்டு  மீறலை தன் வாழ்வாக ஏற்கும் போது  அது ஒன்றையே தங்கள் இலக்காக அமைக்க நேரிடுகிறது. ஒற்றை இலக்கிற்காக வாழும் வாழ்வு ஆன்மீகற்ற நிலையில் நரகமே. அன்னா விரான்ஸ்கியை தன் கட்டுப்பாட்டில் வைக்க முயல இதுவே காரணமாகும். ஒற்றை இலக்கின் நரகத்தில் அன்னா படும் பாடு அன்னாவின் மன ஒட்டமாக நீள்கிறது. இதை உணராத விரான்ஸ்கியை தண்டிப்பதாக எண்ணி தற்கொலை செய்து கொள்கிறாள்.மரணத்தின் தறுவாயில் இருக்கும் போது வெளிப்படும் இளமைக்கால நினைவுக்கு   நனவுலகில் அடையவே இயலாத இளமையின்பொற்கனவே காரணம் என எண்ணுகிறேன். 

No comments:

Post a Comment