Monday 18 March 2019

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா வாசிப்பு அனுபவம்-1

மீறலின் ஊசலாட்டம்-1
 டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய  அன்னா கரீனா  நாவலின் மொழிபெயர்ப்பை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.காதலை கூறும் நூல் என்று கொண்டால் தன்னை முன்னிலைப்படுத்தி காதல் கொள்ளும் லெவின் காதல் எவ்வாறு படிப்படியாக வளர்கிறது என்பதையும், அன்னாவின் காதல் எவ்வாறு வீழ்ச்சியுறுகிறது என்பதையும்  காட்டுகிறது.மூன்று  இணைகளின் காதல் இதில் உள்ளது.1. காதல் இருந்தும் சூழலின் காரணமாக சொல்லாமல் அழியும் காதலை கொண்ட இணையான கோனிஷெவ் மற்றும் வாரெங்கா  2 காதலை வெளிப்படுத்தியதும் மற்றவர் ஏற்றுக்கொள்ள  முதலில் மறுத்து பின் ஏற்றுக்கொள்ளும் இணையான லெவின் மற்றும் கிட்டி3. காதல்  கொண்டதன் பொருட்டு அனைத்தும் துறக்க தயாராகும் இணையான விரான்ஸ்கி. கோனிஷேவ் வாரெங்கா இருவரின் காதலை மற்றவர்கள் எதிர்பார்த்திருக்க ,அதற்கு எவ்வித தடையும் இல்லாதபோது  காதலை வெளிப்படுத்த இயலாலதை ஊழ் என்று தான் கொள்ளவேண்டும்.ஏன் காதலை சொல்லாது விடுகிறார்கள்?. சொல்லப்பட்டாலும் ஏன் மறுதலிக்கப்படுகிறது?.எக்காரணத்தால் ஏற்றுக்கொள்ளுப்படுகிறது?என்பதை விளக்க ஊழ் என்ற ஒன்றையே முன்வைக்க வேண்டியுள்ளது.  முதலாவது இணையை  காதலை சொல்லாத காரணத்தால் நீக்கிவிட்டு மீதமுள்ள இரு இணைகளின் காதலில்  தன் உணர்வுகளை இணையிடம் உணர்த்துவதால்தான்  வெற்றி பெறுகிறது லெவினின் காதல் என்பதையும்,அவ்வாறு இல்லாததால்  அழிகிறது அன்னாவின் காதல் என்பதையும் நாவலின் காதல் பற்றிய கருத்தாக கொள்ளலாம்.ஆனால்  பேரிலக்கியங்கள் வாழ்வின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து காட்டுவது இல்லை. இரஷ்யா பழமையில் இருந்து புதுமைக்கு மாறும் யுகசந்தியும் அது அனைத்திலும் மாற்றும் மாற்றங்களும்  தனி மனிதனின்  ஆன்மீக தேடலும் கொண்டதாகவும் இந்நூல் அமைந்துள்ளது.எந்தகதைக்கும் நாயகன்/நாயகி என  ஒருவரைக்  கொண்டால் எதிர் நாயகன்/நாயகியாக மற்றவரைப் கொள்ளலாம். இதில் லெவினை நாயகனாக கொண்டால் அன்னா எதிர்நாயகன். இருவரின் நிறைவு பற்றிய தேடல்கள் வேறு  என்பதால் தேடல் முடியும் இடமும் வேறாக இருக்கின்றன.இந்நூலில் தன்னை முன்னிலைப்படுத்தி காதல் கொள்ளும் லெவின் முதலில் ஷெர்பட்ஸ்காயா குடும்பத்தின் மூன்று சகோதரிகளில்  யாரை காதலிப்பது என்ற குழப்பத்தில் முதல் இருவரையும் தவற விடுகிறான்.மீதமுள்ள கிட்டியிடமும் ஆப்ளான்ஸ்கி உனக்கு போட்டியாக விரான்ஸ்கி இருக்கிறான் என்று சொன்ன பிறகுதான் காதலை வெளிப்படுத்துகிறான்.வெளிப்படுத்தப்பட்ட காதல் மறுக்கப்பட்டு தன் கிராமத்திற்கு சென்று விடுகிறான்.கிட்டிக்கோ லெவின்காதலை சொல்லும் போது விரான்ஸ்கிக்கு வாக்கு ஏதும் கொடுக்காத போதும்  தன்  தாயால் குழப்பப்பட்டு யார் பக்கம் சாய்வது என்ற நிலை.ஒருவனோ  உயர் பதவியோ பண்பாடான நடத்தையோ மிகை அழகோ நவீன யுகத்தின் தொழிலும் அற்ற ஆனால் தன்னை போலவே மற்றவரையும் மதிக்கும்  கிராமத்து நிலப்பிரபு. மற்றவனோ அழகும் பதவியும்   நவீன நாகரீகத்தின் வாழ்வும் கொண்ட இராணுவ அதிகாரி.யாரைத்தேர்ந்தெடுப்பது என்கின்ற போது  இதுவரை வாழ்ந்து பார்க்காத கிராமத்து வாழ்வை நீக்கிவிட்டு வாழ்ந்த வாழ்க்கையை சார்ந்த விரான்ஸ்கி பக்கம் சாய்கிறாள்.விரான்ஸ்கி கைவிட காலமாற்றத்தில் மீண்டும் கெவின் தன் காதலை சொல்லும் போது ஏற்றுக்கொள்ளும் கிட்டி பின் தன் கணவருடன் தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதன் காரணமாகவே காதலை கடைசி வரை கொண்டு செல்ல முடிகிறது.தன்னை முன்னிலைப்படுத்தி முதலில் பொருட்களாலான உலகை வெல்ல ஆசைப்படும் லெவின் தன் காதலாலும் நிறைவு தேடும் மன ஒட்டத்தாலும் மாறி ஒரு தூய மனிதனாக மாறுகிறான்.இளமைக்கால வாழ்வைப் பற்றிய கற்பனைகள் ஒவ்வொன்றாக நொறுங்கும் போதும் அதிலிருந்து மீண்டு வந்து ஆன்மீகமானதொரு வாழ்க்கையை நோக்கி செல்லும் போது மீறல்கள் பல புரிந்தாலும் புறத்தில் இருந்து அகத்திற்கு செல்லும் வழியை கைக்கொண்டு இருந்ததால் லெவின் தன் நிறைவை அடைகிறான்.இதற்கு மாறாக அன்னாவின் காதல் அமைந்துவிடுகிறது.தன் சகோதரனை சந்திப்பதற்காக மாஸ்கோ வரும் அன்னா கரீனினா, அவன் குடும்பத்தின் களவொழுக்க சிக்கலை தீர்க்க முடிந்த அன்னா, தானும் அதே போன்ற சிக்கலை விரும்பி ஏற்றுக்கொள்வது நகைமுரண்.ஜெ. நீங்கள்சொல்வது போல அன்னா கிட்டியை வெல்லும் பொருட்டு விரான்ஸ்கியை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறாள் என்றாலும் விரான்ஸ்கி அவளுடைய ஈர்ப்புக்கு ஆட்பட காரணம் தன்னை,தன் சமூகத்தின் கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு வெளிச்செல்லும் பெண்மையின் மீறலின் விசை .கிராதத்தின் காண்டீபனை இழுக்கும் மலைப்பெண்ணான பார்வதி போல. விரான்ஸ்கியை  பொருத்தவரை முதலில் கிட்டியிடம் சாதாரணமாகவே பழகுகிறான்.யாரையும் மணம் புரிந்து கொள்ளும் எண்ணம் இல்லாமல் இருக்கிறான்.

No comments:

Post a Comment